ECONOMY

13 இடங்களில் இன்றும் நாளையும் மாநில அரசின் மலிவு விற்பனை

3 பிப்ரவரி 2024, 6:07 AM
13 இடங்களில் இன்றும் நாளையும் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்  (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான  ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை  சனி மற்றும ஞாயிற்றுக்கிழமைகளில் எட்டு இடங்களில் நடைபெறவுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வழங்கும் இந்த விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி கம்போங் ஓலா லெம்பிக் (சுங்கை பீலேக் தொகுதி), அல்-இஸ்திகாமா பள்ளிவாசல், 13வது மைல் (ஸ்ரீ செர்டாங் தொகுதி), செலாயாங் பாரு (சுங்கை துவா தொகுதி), தாமான் ராமால் இண்டா மூன்றாம் பிரிவு (சுங்கை ராமால் தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை தோக் மூடா சமூக மண்டபம் ( செமெந்தா தொகுதி), டத்தாரான் நியாகா செரண்டா (பத்தாங் காலி தொகுதி), கம்போங் டத்தோ லீ கிம் சாய் (ரவாங்), கம்போங் செப்பக்காட் (புக்கிட் மெலாவத்தி தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த எட்டு இடங்கள் தவிர்த்து செகி ஃப்ரெஷ் பேரங்காடியுடன் இணைந்து மேலும் ஐந்து இடங்களில் இந்த மலிவு விற்பனையை பி.கே.பி.எஸ். நடத்தவிருக்கிறது.

கோழி, மீன், அரிசி, இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருள்கள் மலிவான விலையில் வழங்கும் இந்த விற்பனை ஜாலான் கெபுன், சுங்கை பெசார், கெம் ரிம்பா, பண்டமாரான், பண்டார் டெக்னோலோஜி காஜாங் ஆகிய இடங்களில் உள்ள செகி ஃப்ரெஷ் பேரங்காடி கிளைகளில் நாளை நடைபெறவிருக்கிறது.

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஆதரவுடன் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனை குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருள்களை  பெறுவதற்குரிய வாய்ப்பினை வழங்குகிறது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை  எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த விற்பனையில் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.