ECONOMY

போலீஸ் சோதனையில் மூவர் கைது- வெ.200,000 போதைப் பொருள், சொத்துகள் பறிமுதல்

3 பிப்ரவரி 2024, 5:33 AM
போலீஸ் சோதனையில் மூவர் கைது- வெ.200,000 போதைப் பொருள், சொத்துகள் பறிமுதல்

கோலாலம்பூர், பிப் 3- தலைநகர், ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த புதன் கிழமை அதிரடிச் சோதனை நடத்திய போலீசார் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 18.534 கிலோ கஞ்சா மற்றும் 2001 எர்மின் 5 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. நோர்ஹிஷாம் முஸ்தாபார் கூறினார்.

மாலை 4.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட  அச்சோதனையில் 277 வெள்ளி ரொக்கம், நிசான் நவாரா மற்றும் ஃபோர்ட் ரேஞ்சர் வாகனங்கள், மடிக்கணினி  ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த  சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 206,900 வெள்ளியாகும் எனக் கூறிய அவர், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் 18,591 போதைப் பித்தர்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமானதாகும் என்றார்.

அந்த மூவரின் மீது மேற்கொள்ளப்பட்ட சிறு நீர் சோதனையில் அவர்கள் அனைவரும் போதைப் பழக்கம் கொண்டவர்கள் என்பது கண்டறியப்பட்டது என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த மூவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.