கோலாலம்பூர், ஜன 24 - நாடு முழுவதும் உள்ள திருமுருகன் திருத்தலங்களில் தைப்பூச விழா களைகட்டத் தொடங்கி விட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு கோலாலம்பூர் ஜாலான் துன் எச் . எஸ். லீ யிலுள்ள அமைந்துள்ள தாய்க்கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ புறப்பட்ட வெள்ளி இரதம் நேற்றிரவு 9.00 மணிக்குப் பத்துமலைத் திருத்தலம் நோக்கிப் புறப்பட்டது.
சிறப்பு பூஜைகளுக்குப் பின் முருகன் பெருமானும் வள்ளி தெய்வானையும் சமேதரராய் வெள்ளி இரதத்தில் புறப்படும் காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
இன்று மாலை 4.00 மணியளவில் வெள்ளி இரதம் பத்துமலை, ஸ்ரீ சுப்பிமணியர் சுவாமி திருத்தலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தேங்காய் உடைத்து வெள்ளி ரத ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். வழிநெடுகிலும் வெள்ளி ரதத்தின் முன்புறமும் பின்புறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் சென்று கொண்டிருக்கின்றனர்.
பக்தர்களில் பெரும்பாலோர் பால் குடங்களை ஏந்திச் சென்கின்றனர். வெள்ளி ரதம் செல்லும் வழி நெடுகிலும் அர்ச்சனைகளும் நடைபெற்றன. பாதுகாப்பிற்காகப் போலீசாரும் உடன் செல்கின்றனர். அதோடு இரத ஊர்வலம் செல்லும் வழி நெடுகிலும் தண்ணீர் பந்தல்கள் போடப்பட்டிருந்ததால் இரத ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு பெரும் பயணாகவும் அது அமைந்தது. வெள்ளி ரதம் பத்துமலை சென்றடைந்தவுடன் சேவல் கொடி ஏற்றப்பட்டு பத்துமலை தைப்பூசக் கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.
இந்த தைப்பூச விழா பினாங்கு, ஜோகூர் உள்பட நாடு முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சிலாங்கூரில், பத்து மலைத் திருத்தலத்தில் 20 லடசம் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கோல சிலாங்கூர் மற்றும் கெர்லிங்கில் உள்ள சுப்பிரமணியர் ஆலயங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.




