கோலாலம்பூர், ஜன 24- சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகா
(ஜே.பி.ஜே.) கடந்தாண்டு வெளியிட்ட குற்றப்பதிவுகளின் எண்ணிக்கை 32
விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் பல்வேறு
போக்குவரத்து குற்றங்களுக்காக 263,786 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்ட
வேளையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 349,289ஆக உயர்வு கண்டது.
கடந்தாண்டில் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களுக்காக மிக அதிகமாக
அதாவது 111,837 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்ட வேளையில்
லைசென்ஸ் இன்றி அல்லது லைசென்ஸ் காலாவதியான நிலையில்
வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 30,142 குற்றப்பதிவுகளும் இதரக்
குற்றங்களுக்காக 17,799 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டதாக மாநில
ஜே.பி.ஜே. இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் கூறினார்.
மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படும் டயர்கள், செயல்படாத வாகன
சமிக்ஞை விளக்குகள் போன்றவை அதிகம் பதிவாகும் தொழில்நுட்பம்
சார்ந்த குற்றங்களாகும். தங்கள் வாகனங்களைப் பராமரிப்பதில் அதன்
உரிமையாளர்கள் அக்கறை செலுத்தாததை இது காட்டுகிறது என்று அவர்
தெரிவித்தார்.
பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் தங்கள் வாகனம் நல்ல நிலையில்
இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படி வாகன ஓட்டுநர்களைக் கேட்டுக்
கொள்கிறோம் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள பூச்சோங் செலாத்தான் டோல் சாவடியில் சிலாங்கூர்ஜே.பி.ஜே.வின் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் பங்கு கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சோதனையில் 1,217 வாகனங்கள் சோதனையிடப்பட்ட வேளையில்
அவற்றில் 583 வாகனங்களுக்குப் பல்வேறு குற்றங்களுக்கான சம்மன்கள்
வழங்கப்பட்டன. மேலும் மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




