NATIONAL

ஊழல் வழக்கில் முன்னாள் சொக்சோ பணியாளர் தினேஷூக்கு வெ.70,000 அபராதம்

24 ஜனவரி 2024, 2:38 AM
ஊழல் வழக்கில் முன்னாள் சொக்சோ பணியாளர் தினேஷூக்கு வெ.70,000 அபராதம்

ஷா ஆலம், ஜன. 24 - பெஞ்சானா 3.0 திட்ட விண்ணப்பத்திற்கு அங்கீகாரம் அளிப்பதற்குக் கைமாறாக  38,000 வெள்ளியை லஞ்சமாகப்  பெற்றதாகக் கொண்டுவரப்பட்ட  இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின்  முன்னாள் பணியாளர் ஒருவருக்குச் செஷன்ஸ் நீதிமன்றம் 70,000  வெள்ளி அபராதம் விதித்தது.

முப்பது வயதான எஸ்.தினேஷ்  என்பவருக்கு  இத்தண்டனை வழங்கிய  நீதிபதி டத்தோ அனிதா ஹருண்,  அபராதத்தைச் செலுத்த தவறினால்  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அக்காலக்கட்டத்தில்  சொக்சோவின் வேலைவாய்ப்பு சேவை அதிகாரியாக இருந்த  தினேஷ் பெஞ்ஜானா 3.0 திட்டத்தின் கீழ் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் பயிற்சிக்கான  விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்காக ஒரு தனிநபர் மூலம் ஒரு நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து 38,000 வெள்ளியைப்  பெற்றதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 மற்றும் 15 ஆம் தேதிகளில் சிப்பாங்கில் மற்றும்  டெங்கிலில் உள்ள இரண்டு உணவகங்களில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கும் மிகாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 165 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எநிர்நோக்கியிருந்தார்.

தினேஷின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காத்தான் மருதமுத்து, இது தனது கட்சிக்காரருக்கு  முதல் குற்றம் என்பதோடு தவறுக்கு வருந்தி மீண்டும் அவ்வாறு செய்வதில்லை என  உறுதி பூண்டுள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி சொக்சோவில் பணிபுரிவதை விட்டுவிட்டார். இப்போது மளிகைக் கடை உதவியாளராக 1,500 சம்பாதிக்கிறார். அதே நேரத்தில் அவரது மனைவி பகுதி நேர முதலீட்டு முகவராக இருக்கிறார் என்று அவர்  கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.