NATIONAL

போதைப் பொருளைக் கடத்தியதாகத் தாய், மகன் உள்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

24 ஜனவரி 2024, 2:10 AM
போதைப் பொருளைக் கடத்தியதாகத் தாய், மகன் உள்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

ஜொகூர் பாரு, ஜன 24 - இம்மாத தொடக்கத்தில் 24.2 கிலோ போதைப்பொருளை கடத்தியதாக தாய், மகன் உள்பட ஐவர் மீது  இங்குள்ள  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஹிடாயாத்துள் ஷூயுஹாடா சம்சுடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது  அதனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக  வாங் சீ வெய் (வயது 41),  அவரது தாயார், ஆ யீ ஹ்வா (வயது 62), அவர்களது நண்பரான சான் சியூ ஹான் (வயது 60) மற்றும் திருமணமான தம்பதியரான தாய் காய் செங் (வயது 34,  யூப் ஜூ ஜின் (வயது 28) ஆகியோர் தலையை அசைத்தனர்.

இருப்பினும், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமிருந்தும் வாக்குமூலம்  பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் தாமான் லார்கின் இடமானில் உள்ள ஒரு வீட்டில் 16.4 கிலோ மெத்திலினெடியோக்சிமெத்தம்பெட்டமின் மற்றும் 7.7 கிலோ கஞ்சாவை கூட்டாகக் கடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவர் மீதும்  1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்  39பி (1)(A) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 39பி (2) இன்   கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு மரண தண்டனை, அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 15 பிரம்படி வழங்கப்படும்.

இதனிடையே,  1.77 கிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமைன், நிமெட்டாசெபம் (0.59 கிராம்) மற்றும் கஞ்சா (4.93 கிராம்) கடத்தியதாக  அதே நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட  மூன்று குற்றச்சாட்டுகளையும்  வாங் ஒப்புக்கொண்டார்.

ரசாயன அறிக்கைகள்  இன்னும் கிடைக்காததால்  அனைத்து வழக்குகளையும்  எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் தேதிக்கு  நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.