ஈப்போ, ஜன 24 - படகு வீடு எனப்படும் தங்கும் வசதி கொண்ட படகை
நங்கூரமிடும் போது தவறி ஏரியில் விழுந்த ஆடவர் நீரில் மூழ்கி
மாண்டார். இத்துயரச் சம்பவம் கிரீக் அருகே உள்ள தெமெங்கோர் ஏரியில்
நேற்று மாலை நிகழ்ந்தது.
முகமது ஜூல்ஃபிகார் ஜூல்கர்னாய்ன் (வயது 33) என்ற அந்த ஆடவரின்
சடலம் நேற்றிரவு 11.25 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாகப் பேராக்
மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி
இயக்குநர் சபோரோட்ஸி நோர் அகமது கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.20 மணியளவில் தங்களுக்குப்
புகார் கிடைத்ததைத் தொடர்ந்து இரவு 7.56 மணியளவில் மீட்புக் குழுவினர்
சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.
கிரீக் தீயணைப்பு நிலையத்தின் உறுப்பினர் ஒருவரின் மகனான முகமது
ஜூல்ஃபிகார், அந்த ஏரியில் உள்ள சிறிய படகை நங்கூரமிட முயன்ற
போது நீரில் தவறி விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
தேடுதல் நடவடிக்கையில் தீயணைப்புத் துறை, போலீஸ், பொது தற்காப்பு
படை, மலேசிய தன்னார்வலர் இலாகா ஆகியவற்றைச் சேர்ந்த 31
உறுப்பினர்களோடு பொது மக்களும் பங்கு கொண்டனர். மேலும்
இந்நடவடிக்கையில் ஏழு படகுகள் பயன்படுத்தப்பட்டன என்று அவர்
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட அவ்வாடவரின் சடலம் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகப்
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த மீட்பு
நடவடிக்கை இன்று விடியற்காலை 12.30 மணியளவில் முடிவுக்கு வந்தது
என்றார்.




