NATIONAL

நிர்வாக நடைமுறைகள் வேண்டாம் - சுயமாக முடிவெடுக்க பல்கலைக்கழகங்களை அனுமதிப்பீர்- பிரதமர் வலியுறுத்து

22 ஜனவரி 2024, 9:00 AM
நிர்வாக நடைமுறைகள் வேண்டாம் - சுயமாக முடிவெடுக்க பல்கலைக்கழகங்களை அனுமதிப்பீர்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர் ஜன 22- பழைய நிர்வாக நடைமுறைகளைக் கடைபிடிப்பதைக் கைவிடும்படி உயர்கல்வி அமைச்சை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார். பல்கலைக்கழகங்களின் சார்பில் பெரும்பாலான முடிவுகளை எடுக்க காலத்திற்கு ஒவ்வாத இந்த நடைமுறை அனுமதியளிப்பதாக அவர் சொன்னார்.

தாங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் மற்றும் முன்னுரிமை தர வேண்டிய அம்சங்கள் குறித்து உயர்கல்விக் கூடங்களே முடிவெடுப்பதற்கான வாய்ப்பினை அமைச்சு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு உலகலாவிய அறிவுசார் சொற்பொழிவு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவசியம் கருதி இந்த விவகாரத்தை நான் இங்கு முன்வைக்கிறேன். பிஸா திட்டம் (அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்டம்) தொடர்பில் சில விஷயங்களின் என்னிடம் முன்வைக்கப்பட்டன. இது உண்மையில் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பழைய செயல்முறைகளை நாம் தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருந்தால் நாம் பின்தங்கி விடுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் உயர்கல்வித் துறை முன்னோக்கிச் செல்வதற்கு ஏதுவாக தெளிவான கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் அமைச்சு வரைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்பிட்டத் துறைகளில் குறிப்பாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் உயர்கல்விக் கூடங்கள் சொந்த திட்டங்களை அறிமுகம் செய்வதை நான் ஊக்குவிக்கிறேன். அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் அதிகமானத் திட்டங்களை அமல்படுத்துவதற்குரிய வாய்ப்பும் கிட்டும் என்றார் அவர்.

நம்மிடம் போதுமான வளங்கள் இல்லை. இருப்பதைக் கொண்டு இப்போதே ஏதேனும் செய்தாக வேண்டும். நான் அமைச்சுக்கு அறிவுறுத்தியதைப் போல் சில நடவடிக்கைகள் இவ்வாண்டிலேயே எடுக்கப்பட வேண்டும். எந்த காரணமும் கூறக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.