ஷா ஆலம், ஜன 22- துணைப் பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு ஒற்றுமைப் பொங்கல் நேற்று இங்குள்ள செக்சன் 16, டி.எஸ்.ஆர். மாநாட்டு மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் துறை துணையமைச்சர் எம்.குலசேகரன், ஒற்றுமைத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி மற்றும் பிரமுகர்களும் பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக 200 உயர்கல்விக்கூட மாணவர்களுக்குக் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
இந்த பொங்கல் விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி, திவேட் எனப்படும் உயர் ஆற்றல் கொண்ட தொழில் நுட்ப மற்றும் தொழில் கல்வித் துறைகளில் (திவேட்) இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இந்திய சமூகத்தில் நிலவும் சமூகப் பிரச்சனைகளுக்குக் கல்வியின் வாயிலாக மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.




