தம்பின், ஜன 20- சாலையின் குறுக்கே வந்த காட்டுப் பன்றியை மோதிய சம்பவத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், 7.3வது கிலோ மீட்டரில் கம்போங் ரோக்கான் அருகே இன்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த போது இருபது வயதான அந்த மோட்டார் சைக்கிளோட்டி செமெஞ்சோ ஐ.ஓ.ஐ.யில் உள்ள பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்ததாக தம்பின் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. அமிருடின் சரிமான் கூறினார்.
ட்ரோன் இயக்குநராக வேலை செய்து வந்த அந்த இளைஞர் சாலையைத் திடீரெனக் கடந்த காட்டுப்பன்றியின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தின் காரணமாக தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளான அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என அமிருடின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
உயிரிழந்த அந்த இளைஞரின் சடலம் சவப்பரிசோதனைக்காக தம்பின் மருதுவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.








