கோம்பாக் ஜன 19 - செலாயாங் நகராண்மைக் கழகத்தின் 2024/2025 ஆம் ஆண்டு தவணைக்கான கவுன்சிலர்களாக இரு புது முகங்கள் உட்பட 22 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நியமனத்தில் நான்கு இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வி.என் முனியாண்டி, எஸ்.தேவேந்திரன், பி.மாரியம்மாள், கே, தனபால் ஆகியோர் அந்த உறுப்பினர்களாவர்.
இங்குள்ள செலாயாங் நகராண்மைக் கழக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் நகராண்மைக் கழக தலைவர் டத்தோ முகமது யாஸிட் சைரி முன்னிலையில் அவர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோம்பாக் மாவட்ட ஓராங் பெசாருக்கான கோட்டா டான்ஸ்ரீ வான் முகமது பாவான்தேவுக்கு ஒதுக்கப்பட்ட வேளையில் 12 இடங்களை பி.கே.ஆர். கட்சியும் ஐந்து இடங்களை ஜசெகவும் நான்கு இடங்களை அமானாவும் பகிர்ந்து கொண்டது என்று டத்தோ முகமது யாஸிட் கூறினார்.
கடந்த தவணை யின் போது இடம் பெற்றிருந்த 20 உறுப்பினர்கள் இம்முறையும் பதவியைத் தொடரும் அதேவேளையில் அமானா கட்சியைச் சேர்ந்த இரு புதுமுகங்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
நகராண்மைக் கழகத்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் எழக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதில் , நகராண்மைக் கழகம் மற்றும் மாநில அரசுக்கிடையே இணைப்பு பாலமாக நகராண்மைக் கழக உறுப்பினர்கள் விளங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.




