கோலாலம்பூர், ஜன 19 - ஜோகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், பகாங் மாநிலத்தில் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் தங்கி உள்ளவர்கள் எண்ணிக்கை 205 பேராக உள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை கூறியது.
ஜோகூர் மாநிலத்தை பொறுத்தவரை பத்து பகாட்டில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையம் நேற்று மாலை மூடப்பட்ட வேளையில் சிகாமாட்டில் உள்ள இரு மையங்களில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இன்னும் அடைக்கலம் நாடியுள்ளனர்.
சபா மாநிலத்தில் நேற்று ஒரு நிவாரண மையம் மூடப்பட்டது. பெலுரான் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே துயர் துடைப்பு மையத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பகாங் மாநிலத்தின் ரொம்பினில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் தங்கியுள்ளனர்.
இதனிடையே, நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தில் உள்ளதை வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் டெலிமெட்ரி நிலைய தரவு காட்டுகிறது.
வெள்ளம், மண்சரிவு மற்றும் பாலம் உடைந்தது போன்ற காரணங்களால் நாடு முழுவதும் உள்ள 27 சாலைகள் வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
சரவா மாநிலத்தின் கூச்சிங்கில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.




