ஈப்போ, ஜன 19: இன்று காலை தஞ்சோங் மாலிம் அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் (பிளாஸ்) கிலோமீட்டர் 375.4 இல் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு அடுக்கு விரைவுப் பேருந்து தீப்பிடித்ததால் 17 பயணிகளும் இரண்டு ஓட்டுநர்களும் கலக்கமாக காணப்பட்டனர் என தீயணைப்பு துறை கூறியது.
சிலிம் ரிவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு (பிபிபி) காலை 5.19 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், பிபிபி தஞ்சோங் மாலிமின் உதவியுடன் சுமார் 20 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் சயானி சைடோன் கூறினார்.
அவர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்தபோது, 17 பயணிகளை (14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள்) ஏற்றிச் சென்ற விரைவு பேருந்து சுமார் 80 சதவீதம் எரிந்துவிட்டது.
"தீ பரவுவதற்குள் அனைத்து பயணிகளும் பேருந்தில் இருந்து வெளியேறினர். பயணிகளுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை," என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7.23 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும்,அந்த விரைவு பேருந்து ஜொகூர், மெர்சிங்கில் இருந்து கங்கார், பெர்லிஸ் நகருக்குப் பயணிகளை ஏற்றிச் சென்றதாக சயானி கூறினார்.
– பெர்னாமா




