செர்டாங், ஜன 18: செர்டாங் கேடிஎம் நிலையத்தின் மேம்பாலத்தை சுற்றி கொள்ளை மற்றும் கற்பழிப்பு குற்றத்தில் ஈடு பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பாகிஸ்தானியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் ஶ்ரீ கெம்பாங்கன் தாமான் செர்டாங் பெர்டானா கொண்டோமினிய நடைபாதை பகுதியில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி ஏ.ஏ.அன்பழகன் கூறினார்.
டிசம்பர் 30ஆம் தேதி செர்டாங் கேடிஎம் நிலையத்தின் மேம்பாலத்தில் 29 வயதுடைய முதல் சந்தேக நபர், ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப் படுவதாகவும், மேலும், 23 வயதுடைய இரண்டாவது சந்தேக நபர், அதே பகுதியில் ஜனவரி 14 அன்று 29 வயதுடைய பெண்ணிடம் கொள்ளை அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்ப படுவதாகவும் அவர் கூறினார்.
செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவரின் கைத்தொலைபேசி திருடப்பட்டது என்றார்.
இரண்டு சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டப் பிரிவு 392/397/376 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) இன் கீழ் கைது செய்யப்பட்டு, ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா




