ஜோர்ஜ் டவுன், ஜன 18 - காரை ஆபத்தான முறையில் செலுத்தி மூன்று
விபத்துகள் ஏற்படக் காரணமாக இருந்ததாக மூதாட்டி ஒருவருக்கு எதிராக
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மூன்று குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டன.
மாஜிஸ்திரேட் சித்தி நுருள் சாஹிலா பாஹ்ரின் முன்னிலையில் கொண்டு
வரப்பட்ட குற்றச்சாட்டுகளை 76 வயதான டான் லியுக் லேய் என்ற அந்த
மூதாட்டி மறுத்து விசாரணை கோரினார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில்
இங்குள்ள ஜாலான் புக்கிட் காம்பிரில் காரை வேகமாகச் செலுத்தி
மோட்டார் சைக்கிளோட்டியான முகமது அபிக் ரோஸ்னி (வயது 23)
விபத்துக்குள்ளாவதற்குக் காரணமாக இருந்ததாக அவருக்கு எதிரான முதல்
குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
அதே இடத்தில் அதே நேரத்தில் ஆபத்தான முறையில் காரை வேகமாகச்
செலுத்தி மோட்டார் சைக்கிளோட்டியான முகமது நோர் எஸ்ரி அகமது
நோர்டின் (வயது 40) மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நுர்
இர்பான் ஹக்கிட் முகமது நோர் எஸ்ரி (வயது 15) ஆகியோருக்கு காயம்
ஏற்படுத்தியதாக அவர் இரண்டாவது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளோட்டியான முகமது ஷியாமில் ஜூல்கர்னாய்ன் (வயது 22) மற்றும் மோட்டார் சைக்கிள் பயணியான கிறிஸ்டினா அப்துல்ல (வயது 22) ஆகியோர் காயமடையக் காரணமாக இருந்ததாக மூன்றாவது குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 5 ஆண்டு
வரையிலான சிறைத்தண்டனை மற்றும் வெ.5,000 முதல் வெ.15,000
வரையிலான அபராதம் விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 42(1) பிரிவின் கீழ் அந்த மூதாட்டி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15,000 வெள்ளி
ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், இவ்வழக்கின் மறு
விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.




