கோலாலம்பூர், ஜன 18 - முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனிடம்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
உறுதிப்படுத்தியது. 1990ஆம் ஆண்டுகளில் அவர் ஈடுபடத் தொடங்கியதாக
நம்பப்படும் வர்த்தகங்கள் தொடர்பில் இந்த இந்த வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
வாக்குமூலம் வழங்குவதற்கும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள
சொத்துகள் குறித்த விபரங்களை வழங்குவதற்கும் அந்நபரை எம்.ஏ.சி.சி.
அழைத்ததாக வட்டாரம் ஒன்று கூறியது.
அரசாங்கத் தொடர்புடைய நிறுவனம் (ஜி.எல்.சி.) ஒன்றின் துணை
நிறுவனத்தை சம்பந்தப்பட்ட நபர் கொள்முதல் செய்தது தொடர்பில் இந்த
விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சொத்துகளை எழுத்துப்பூர்வமாக
அறிவிக்கும்படி இந்த விசாரணையின் போது அந்நபர் கேட்டுக்
கொள்ளப்பட்டதாக அந்த வட்டாரம் மேலும் கூறியது.
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை எம்.ஏ.சி.சி. கடந்த
மாதம் விசாரணைக்கு அழைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.




