கோலாலம்பூர், ஜன 18 - நாடு முழுவதும் உள்ள 220 இடங்களில் அந்நிய நாட்டினரின் சட்டவிரோதக் குடியேற்ற மையங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
அந்த 220 இடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளால் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் அவர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் ஆகியவையும் அடங்கும் என்று அவர் கூறினார்.
அடையாளம் காணப்பட்ட குடியேற்ற மையங்களைத் துடைத்தொழிக்க குடிநுழைவுத் துறை நாடு முழுவதும் பெரிய அளவிலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதோடு இந்த விஷயத்தில் ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று அவர் சொன்னார்.
கடப்பிதழ் இல்லாதது, காலவரையறைக்கு அப்பால் தங்கியிருப்பது மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காகக் கடந்த ஜனவரி 1 முதல் ஜனவரி 16 வரை (நேற்று முன்தினம்) மொத்தம் 3,262 அந்நிய நாட்டினர் தடுத்து வைக்கப்பட்டனர் என்று இங்கு நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அதே காலகட்டத்தில், சட்டவிரோதக் குடியேறிகளைத் தங்கள் வளாகத்தில் பணியமர்த்திய குற்றத்திற்காக மொத்தம் 35 முதலாளிகள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் ரஸ்லின் சொன்னார்.
சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியமர்த்தும் முதலாளிகள் எதிராக கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.
பெரும்பாலான உள்ளூர் முதலாளிகள் கடப்பிதழ்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும் அந்நிய நாட்டினருக்குச் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை வழங்குவதையும் காணமுடிகிறது. இதனால் அவர்கள் இந்த நாட்டில் தொடர்ந்து தங்கி பணியாற்ற முடிகிறது எனக் கூறிய அவர், இனி உணவகங்கள் உட்பட ஒவ்வொரு வளாகத்திலும் சோதனை நடத்தப்படும் என்றார்.
ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும் இன்னும் பிடிவாதமாக இருக்கும் நாடு முழுவதும் உள்ள முதலாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தனது துறை தொடர்ந்து விரிவுபடுத்தும் என்று ரஸ்லின் கூறினார்.




