ECONOMY

அரசு ஊழியர்கள் விரைந்து செயல்பட வேண்டும்- 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

15 ஜனவரி 2024, 8:25 AM
அரசு ஊழியர்கள் விரைந்து செயல்பட வேண்டும்- 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

ஷா ஆலம், ஜன 15- மக்கள் எதிர்நோக்கும் குறிப்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பிரச்சனைகளுக்கு அரசு ஊழியர்கள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.

மாநில அரசு நிர்வாகம் அனைத்து தரப்பினராலும் தொடர்ந்து கவனிக்கப்படும் ஒரு நிர்வாகமாக உள்ளதால் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கண்ணாடி வீடு போன்றது நமது நிலை. ஒவ்வொரு செயல் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நாம் தெளிவாக விளக்க வேண்டும் என்பதோடு சில வேளைகளில் விரைந்தும் முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.

இரு தினங்களுக்கு முன்னர் தைப்பூசம் நடைபெறும் பத்துகேவ்ஸ், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் தொடர்பான விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அது குறித்து அறிந்தவுடன் நான் நேற்றிரவு நான் உடனடியாக எனது எக்ஸ் பதிவில் விளக்கமளித்தேன். துறை ரீதியாகவும் அத்தகைய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமிருடின் சொன்னார்.

நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு விஷயம் இரவில் தெரிய வந்தால் காலையில் பதிலளிப்பதற்கு ஏதுவாக  நாம் தயாராக வேண்டும். முடிந்தால் இரவிலேயே பதிலளிக்க வேண்டும். மக்கள் காத்திருக்க மாட்டார்கள். ஆகவே நாம் விரைந்து செயல்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் மத்தியில் நிகழ்த்திய 2024ஆம் ஆண்டிற்கான முக்கிய உரையில் அவர் குறிப்பிட்டார்.

இலக்கவியலை அடிப்படையாக கொண்ட விவேக செயலி சேவைகளை அதிகளவில் வழங்கி வரும் மாநிலம் என்ற முறையில் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

இது போன்ற விஷயங்கள் அரசு ஊழியர்களின் வழக்கமான பணி நெறியிலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக அதனை நாம் செய்துதான் ஆக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கால மாற்றத்திற்கும் நடப்புத் தேவைக்கும் ஏற்பட அரசு ஊழியர்கள் மாற்றங்களையும் புதுமைகளையும் கொண்டு வர வேண்டும். மனித வளம் ஏழு முதல் எட்டு மணி வரையில் மட்டுமே இருந்தாலும் நாம் 24 மணி நேர முறைக்கு தயாராக வேண்டும்.

வேலை நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 வரையிலும் காலை 9.00 மணி முதல மாலை 5.30 மணி வரையிலும் உள்ளது. இந்த நடப்பு விதிகளை நான் உணர்ந்துள்ளேன். எனினும் நெருக்கடியான சூழல் உள்ளது. ஒவ்வொரு விஷயமும் உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

துறைத் தலைவர் விடுமுறையில் இருந்தால் அல்லது அவருக்கு வேறு பணிச்சுமை இருந்தால் அவரின் பொறுப்புகளை ஏற்பதற்கு வேறொருவர் தயாராக இருக்க வேண்டும். எனது வேலை நேரம் முடிந்து விட்டது என்ற காரணத்தைக் கேட்க நான் தயராக  இல்லை என அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.