ECONOMY

‘9 முதல் 5 வரை‘ மனப்போக்கு இனியும் வேண்டாம்- அரசு ஊழியர்களிடையே சீர்திருத்த மனநிலை தேவை

15 ஜனவரி 2024, 6:58 AM
‘9 முதல் 5 வரை‘ மனப்போக்கு இனியும் வேண்டாம்- அரசு ஊழியர்களிடையே சீர்திருத்த மனநிலை தேவை

ஷா ஆலம், ஜன 15- புதிய 2024ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ள இத்தருணத்தில் அரசு ஊழியர்கள் சீர்திருத்த மனப் போக்கை கடைபிடிக்கத் தயாராக வேண்டும் என்று மந்திரி   புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பும் தங்கள் பொறுப்புகள் குறித்த தெளிவான புரிதலும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இன்று இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற அரசு ஊழியர்களுடனான மாதாந்திர ஒன்றுகூடுல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலம் சிறப்பான கவனமும் மிகுந்த எதிர்பார்ப்பும் தேவைப்படக்கூடிய வலுவான மற்றும் ஆற்றல்மிக்க சமூக பொருளாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்பதை அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு தலைமைத்துவத்திற்கும் தாம் நினைவூட்ட விரும்புவதாக அவர் சொன்னார்.

இந்த 2024ஆம் ஆண்டில்தான் அரசு ஊழியர்கள் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் பல்வேறு கொள்கைகளை அமல்படுத்த தொடங்கவுள்ளனர். குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது மற்றும் பொது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் அவற்றில் அடங்கும் என அவர் கூறினார்.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் காட்டிய அதே வேகத்தை இனியும் நிலை  நிறுத்த முடியாது. இன்னும் அதிகவேகத்திற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய சூழல்கள் அதாவது வழக்கமான வேலை நேரத்தையும் தாண்டி வேலை செய்வதற்கு தயாராக வேண்டும் என அவர்  வலியுறுத்தினார்.

திட்டமிடப்பட்ட திட்டங்களை நாம் இவ்வாண்டில் அமல்படுத்தினால் உற்பத்தி மற்றும் சேவைத் துறை சார்ந்தவர்களின் பொருளாதார நகர்வுகளுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நாம் நிறைவு செய்ய இயலும் என அவர் சொன்னார்.

மக்களுக்கு, குறிப்பாக நெருக்கடி காலங்களில் வழக்கத்திற்கு மாறாக மிகவும் திறம்பட பணியாற்றிய மாநில அரசு ஊழியர்களைத் தாம் பாராட்டுவதாகவும் அமிருடின் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.