ஜோகூர் பாரு, ஜன 15- ஈராண்டுகளுக்கு முன்னர் 20,000 வெள்ளியை கையூட்டாக பெற்றதாக சார்ஜன் அந்தஸ்து கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி சித்தி நோராய்டா சுலைமான் முன்னிலையில் தமக்கெதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டை 35 வயதான உஷா நந்தினி மறுத்து விசாரணை கோரினார்.
சிகாமாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையில் பணியாற்றிய போது கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் ஆடவர் ஒருவரிடம் தனது சுய தேவைக்காக லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வர்த்தக க் குற்றப்புலனாய்வுத் துறையினால் குற்றவியல் சட்டத்தின் 408வது பிரிவின் கீழ விசாரிக்கப்பட்டு வந்த வழக்கொன்றில் தனது மனைவியை கைது செய்யாமல் இருக்க அந்த ஆடவர் வழங்கிய லஞ்சத் தொகையை பெற்றதாக அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சார்ஜனுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 1(ஏ) பிரிவின் கீழும் அதே சட்டத்தின் 24(1) பிரிவின் கீழும் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு கூடுதல் பட்சம் 20 ஆண்டுச் சிறை, லஞ்சமாக பெற்றத் தொகையில் ஐந்து மடங்கிற்கும் குறையாத தொகை அல்லது 10,000 வெள்ளி இவற்றில் அதிகத் தொகை அபராதமாகவும் விதிக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 12,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, அவர் தனது அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு ஒவ்வொரு மாதமும் சிகாமாட் எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மறு விசாரணை வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.








