NATIONAL

சிறப்பு பொருளாதார மண்டலம் மீதான வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தத்தில்  மலேசியா-சிங்கப்பூர் கையெழுத்து

11 ஜனவரி 2024, 7:39 AM
சிறப்பு பொருளாதார மண்டலம் மீதான வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தத்தில்  மலேசியா-சிங்கப்பூர் கையெழுத்து

ஜொகூர் பாரு, ஜன. 11- மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே இன்று கையெழுத்தான  புரிந்துணர்வு ஒப்பந்தம்  மூலம் உத்தேச ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ) செயல்  வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முன்னிலையில் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி மற்றும் சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் ஆகியோர்  அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பிரதமர் லீ மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு  அன்வார் மதிய விருந்தையும் வழங்கினார். முன்னதாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலார  துரித  போக்குவரத்து அமைப்பு (ஆர்.டி.எஸ்.) இணைப்புக்கான இடைவெளியை பூர்த்தி செய்யும் நிகழ்வில் அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜொகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வெற்றிக்கான அடையாளமாக விளங்கும் சீன நகரமான ஷென்சென் போல இப்பிராந்தியமும்  வளரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள தென்கிழக்காசியப் பிராந்தியம் பாடுபடுவதால் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான வணிகத் தொடர்புகளை வளர்ப்பதற்கும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் சிங்கப்பூர் எல்லையை ஒட்டிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கு இரு நாடுகளும் பரஸ்பரமாக இணைந்து செயல்படுகின்றன.

இந்த கூட்டு மேம்பாட்டுத் திட்டம்  கடந்த ஆண்டு மே மாதம் இஸ்கந்தர் புத்ரியில் நடைபெற்ற ஜொகூர் மாநில அரசாங்கத்துடனான சந்திப்பின் போது ரபிஸியால்  முன்மொழியப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காகச் சிறப்புப் பணிக்குழுவை அமைப்பதற்கு  இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இஸ்கந்தார் மலேசியா பிராந்தியம் மற்றும் சிங்கப்பூரின் வணிகச் சூழியல் அமைப்புகளையும் இந்த மண்டலம் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.