கோலாலம்பூர், ஜன 11- ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்வு கண்டுள்ளது.
இவ்விரு மாநிலங்களிலும் திறக்கப்பட்டுள்ள 76 நிவாரண மையங்களில்
அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 8,586 பேராக
இருந்தது.
ஜொகூர் மாநிலத்தில் நேற்றிரவு 7,025 பேராக இருந்த வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 7,536 பேராக
உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா)
பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
கோத்தா திங்கி, ஜொகூர் பாரு, குளுவாங், சிகாமாட், கூலாய், பொந்தியான்
ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 53 துயர் துடைப்பு மையங்களில்
அவர்கள் தங்கியுள்ளதாக அந்த அறிக்கை கூறியது.
பகாங் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,610 பேராக உயர்வு கண்டது. நேற்றிரவு
இந்த எண்ணிக்கை 1,561 பேராக இருந்தது. மாரான், ரொம்பின் மற்றும்
பெக்கானில் திறக்கப்பட்டுள்ள 23 நிவாரண மையங்களில் அவர்கள் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
பகாங் மாநிலத்தில் சுங்கை பகாங் மற்றும் சுங்கை ரொம்பின் ஆகிய
ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது. கெடா மாநிலத்தில்
சுங்கை கெடா, பேராக் மாநிலத்தில் சுங்கை பேராக், பெர்லிஸ் மாநிலத்தில்
சுங்கை ஆராவ், திரங்கானுவில் சுங்கை திரங்கானு ஆகியவற்றிலும் நீர்
மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.
வெள்ளம், நிலச்சரிவு, பாலம் சேதமடைந்தது உள்ளிட்ட காரணங்களால்
நாடு முழுவதும் 52 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, சரவா மாநிலத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 12
குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் கூச்சிங்கில் உள்ள துயர் துடைப்பு மையம்
ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நட்மா குறிப்பிட்டது.




