NATIONAL

வெளிநாட்டுத் தொழிலாளர் சரிபார்ப்பு (RTK) மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்

10 ஜனவரி 2024, 6:34 AM
வெளிநாட்டுத் தொழிலாளர் சரிபார்ப்பு (RTK) மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்

ஷா ஆலம், ஜன 10: தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்திற்கான (RTK 2.0) வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் சம்பந்தப்பட்ட சரிபார்ப்பு செயல்முறை மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று உள்துறை அமைச்சகம் மற்றும் குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.

தொழிலாளர்களின் மறுசீரமைப்பு செயல்முறைக்கான பதிவு டிசம்பர் 31-ஆம் தேதி முடிவடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பு செயல்பாட்டில், 1.1 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

"முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுடன் குடிவரவுத் துறை அலுவலகத்திற்கு வருவதன் மூலம் சரிபார்ப்பு செயல் முறையை மேற்கொள்ள வேண்டும், எனவே முதலாளிகள் மலேசியா நிறுவனங்களின் ஆணையத்தில் (SSM) பதிவு செய்யப்பட்டு உள்ளார்களா என்பதை சரிபார்த்து, தொழிலாளர்கள் உண்மையில் இருப்பதை உறுதி செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.

சைபுடின் சிலாங்கூர் குடிவரவுத் துறையில் ஆர்டிகே 2.0 நிகழ்ச்சியை பார்வையிட்ட பிறகு இவ்வாறு கூறினார்.

சரிபார்ப்பு செயல்முறைக்கான கால அவகாசம் முடிந்ததும், செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதைக் கண்டறிந்தால், அந்த நிறுவனத்திற்கு  செக்‌ஷன் 55B, செக்‌ஷன் 55E மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 (திருத்தம் 2002) செக்‌ஷன் 56(1)(d) ஆகியவற்றின் கீழ் தண்டம் விதிக்கப்படும்.

"முதலாளிகள் முன் வந்து சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளவில்லை என்றால், அத்தகைய முதலாளிகள் வெளிநாட்டு ஊழியர்களை சட்டப்பூர்வமாக வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வம் அற்றவர்களாக கருதப்படுவார்கள். அது சட்டத்தின் கீழ் குற்றமாகும்," என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.