ஈப்போ, ஜன 10 - ஆயர் தாவாரில் உள்ள புருவாஸ் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் ங்கே கூ ஹாம் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு
வீசப்பட்டச் சம்பவம் தொடர்பில் போலீசார் சந்தேகப் பேர்வழியைத் தேடி
வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ங்கேவிடமிருந்து இன்று விடியற்காலை 2.55
மணியளவில் மஞ்சோங் போலீஸ் நிலையம் புகாரைப் பெற்றதாக பேராக்
மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான்
பாஸ்ரி கூறினார்.
இச்சம்பவத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ்
பென்ஸ் கார் சேதமடைந்த வேளையில் இதர இரு கார்கள் அதிக
உஷ்ணம் காரணமாகப் பாதிக்கப்பட்டன என்று அவர் இன்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 435வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், பல்வேறு
கோணங்களில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்த சம்பவம் தொடர்பில்
ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக்
கொண்டார்.
புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் காருக்கு சேதத்தை ஏற்படுத்திய
இச்சம்பவம் தொடர்பில் உள்துறை அமைச்சும் அரசாங்கமும் கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜசெக முன்னதாகக் கோரிக்கை
விடுத்திருந்தது.
பொது மக்களின் பாதுகாப்பும் பொது ஒழுங்கும் எப்போதும்
பாதுகாக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து ங்கோவுக்கு அனுதாபம் தெரிவிப்பதோடு அவரின்
குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் புலப்படுத்துவதாக அவர்
சொன்னார்.




