ஈப்போ, ஜன10: நேற்று தாமான் கேனிங்கில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முதியவர் பெட்ரோல் நிரப்ப ஓட்டிவந்த பெரோடுவா மைவி வாகனம் அந்த நிலையத்தின் கண்ணாடி தடுப்பில் மோதியது.
காலை 10.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பெட்ரோல் பம்ப் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக தனது வாகனத்தை ஓட்டி வந்த சமயம் 77 வயது முதியவரின் வலது காலில் திடீரென பிடிப்பு ஏற்பட்டதால் கார் முதியவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக, ஈப்போ மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் கூறினார்.
"இதன் விளைவாக, வாகனம் அங்கு, நிறுத்தப்பட்டிருந்த யமஹா மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின், வளாகத்தின் கண்ணாடியில் மோதியது. ஓட்டுநரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 29 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அங்கிருந்த ஒரு பெண்ணின் வலது காலில் காயம் ஏற்பட்டது என்றும், இந்த வழக்கு சாலை போக்குவரத்து விதிமுறை 1959 விதி 10ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நேற்று மதியம் முதல் முகநூலில் வைரலாகி வருகிறது.
– பெர்னாமா




