இஸ்கந்தார் புத்ரி, ஜன 10 - தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டரங்குகளில்
வடிகால் முறையை மேம்படுத்துவது மற்றும் புற்களைப் பதிப்பது போன்ற
பணிகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் 70 லட்சம்
வெள்ளியை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு
மானியமாக வழங்கவுள்ளது.
தற்போதைய மழை காலத்தின் போது மலேசிய லீக் போட்டிகள் சீராக
நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் திடல்களின் தரத்தை
மேம்படுத்த இந்த மானியம் வழங்கப்படுவதாக அதன் அமைச்சர் ஹன்னா
இயோ கூறினார்.
இந்த மானியத் திட்டத்தின் வாயிலாக அனைத்து மாநிலங்களும் தலா
500,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டைப் பெறும். அதில் 300,000 வெள்ளி
வடிகால்களை தரம் உயர்த்துவதற்கும் 200,000 திடல்களில் புற்களைப்
பதிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அந்த திடல்கள் தரம் உயர்த்தப்பட்டவுடன் அவற்றை முறையாகப்
பராமரிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தாம் தலா 300,000
வெள்ளியை வழங்குவதாக ஜோகூர் டாருள் தாக்ஸிம் கால்பந்து கிளப்பின்
(ஜே.டி.டி.) உரிமையாளர் துங்கு மக்கோத்தா ஜொகூர் துவாங்கு
இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அறிவித்துள்ளார் என அவர் சொன்னார்.
ஒவ்வொரு மாநிலமும் ஒரு விளையாட்டரங்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த நிதியைப் பெறுவதற்கு ஏதுவாக வரும் ஏப்ரல் மாதத்திற்குள் திடலில்
வடிகால் மற்றும் திடல் சீரமைப்பு பணிகள் முற்றுப் பெற்றிருக்க
வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும் அமைச்சின் மானியத்தின் மூலம்
திடலை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டவுடன் பராமரிப்பு பணிகளுக்காக துங்கு மக்கோத்தா தனது பங்காக 300,000 லட்சம் வெள்ளியை வழங்குவார் என்றும் அவர் கூறினார்.




