புத்ராஜெயா, பிப் 9- சபா மலேசியப் பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் நீர்
விநியோகப் பிரச்சனை தொடர்பில் அறிக்கை சமர்பிக்கும்படி
சம்பந்தப்பட்டத் தரப்பினருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
உத்தரவிட்டுள்ளார்.
தாங்கள் எதிர்நோக்கும் நீர் விநியோகப் பிரச்சனை தொடர்பில் யு.எம்.எஸ்.
மாணவர்கள் உயர்கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காடீரிடம்
முறையிடுவதை தாம் சமூக ஊடங்கள் வாயிலாக அறிந்து கொண்டதாக
இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
அங்கு நீர் விநியோகப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என நான்
அறிகிறேன். ஒருவேளை அந்த திட்டம் தாமதமாக தொடங்கப்படலாம்.
எதையும் முடிவு செய்ய நான் விரும்பவில்லை. நீர் விநியோகத்திற்காக
நிதியமைச்சு 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில்
அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள எனக்கு அறிக்கை
தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அமைச்சின் தலைமைச் செயலாளரிடம் இது குறித்து
கருவூலத்தின் தலைமைச் செயலாளர் விளக்கம் கோரலாம்.
இத்திட்டத்திற்கு 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள வேளையில்
அமைச்சும் பல்கலைக்கழகமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து
அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார் அவர்.
அப்பல்கலைக்கழகத்தில் நீர் விநியோகப் பிரச்சனைக்குத் தீர்வு காண
நிதியமைச்சு கடந்தாண்டு மே மாதம் 31ஆம் தேதி 30 லட்சம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்தது. நேற்று அங்கு வருகை மேற்கொண்ட அமைச்சர்
ஜாம்ப்ரி இந்நோக்கத்திற்காகக் கூடுதலாக 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு
செய்வதாக அறிவித்தார்.




