கோல திரங்கானு, ஜன 9 - ஓராண்டிற்கு முன்னர் 97,600 வெள்ளி மதிப்புள்ள
61,000 லிட்டர் டீசலை மோசடி செய்ததாக கப்பல் ஒன்றின் முன்னாள்
மாலுமிக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மூன்று
குற்றஞ்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி முகமது ஜூல் ஜாக்கிகுடின் ஜூல்கிப்ளி முன்னிலையில்
தமக்கெதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகளை அஸ்லி முகமது
நோர் (வயது 38) என்ற அந்த முன்னாள் மாலுமி மறுத்து விசாரணை
கோரினார்.
அல்காஃபி செஃப் எனும் கப்பலை பாதுகாப்பதற்கு தம்மீது வைக்கப்பட்ட
நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் 26,000 லிட்டர் டீசலை
மோசடி செய்ததாகவும் இதனால் 41,600 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகவும்
அவருக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 32,000 வெள்ளி மதிப்புள்ள 20,000 லிட்டர் டீசல் மற்றும் 24,000
வெள்ளி மதிப்புள்ள 15,000 லிட்டர் டீசலை மோசடி செய்ததாக அவருக்கு
எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று குற்றங்களையும் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 12 முதல் 15
வரை கோல திரங்கானு கடற்பகுதியில் புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை
எதிர் நோக்கியுள்ளார். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 14ஆண்டுச்
சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும்
தண்டனைச் சட்டத்தின் 408வது பிரிவின் கீழ் அஸ்லி முகமதுவுக்கு
எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15,000 வெள்ளி
ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, இந்த வழக்கின் மறு
விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.




