புத்ராஜெயா, ஜன 9 - வெளிநாடுகளில் முதலீடு செய்வதைக் குறைத்து
உள்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கும்படி அரசு தொடர்புடைய முதலீட்டு
நிறுவனங்கள் (ஜி.எல்.ஐ.சி.) மற்றும் அரசு சார்பு நிறுவனங்களை (ஜி.எல்.சி.)
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
எனினும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் ஜி.எல்.சி மற்றும் ஜி.எல்.ஐ.சி.
நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக
தளர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் ஊழியர்களுடனான மாதாந்திர
ஒன்றுகூடும் நிகழ்வில் உரையாற்றிய போது நிதியமைச்சருமான அவர்
இதனைத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் முதலீடு செய்வதை குறைப்பது தொடர்பில் நான் பல
உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். ஏனென்றால் நியாயமான காரணங்கள்
இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை மலேசியாவுக்கு ஈர்க்க
நாம் மேற்கொள்ளும் பிரசார இயக்கங்களை நாம் நியாயப்படுத்த
முடியாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டார்.
ஜி.எல்.ஐ.சி மற்றும் ஜி.எல்.சி. நிறுவனங்கள் அமல் செய்யும் திட்டங்கள்
நாம் நிர்ணயித்துள்ள கொள்கைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதை உறுதி
செய்ய தலைவர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கும்படியும்
அவ்விரு தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
உதாரணத்திற்கு எரி சக்தி மாற்றம் மற்றும் இலக்கவியல் உருமாற்றம்
நாட்டிற்கு அவசியத் தேவையாக உள்ளது. இலக்கவியல் உருமாற்றத்தை
நாம் விரைவாக மேற்கொள்ளாவிட்டால் நம் கல்வி முறை மற்றும்
நிர்வாக முறையில் பின்தங்கியவர்களாகி விடுவோம் என்றார் அவர்.
அதிக லாபத்தை ஈட்டும் போது ஜி.எல்.ஐ.சி. நிறுவனங்களும் ஜி.எல்.சி.
நிறுவனங்களும் ஊழியர்களின் நலன் உள்பட நாட்டின் மேம்பாட்டிற்குத் தங்களின் சமூக நிறுவனக் கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




