குவாந்தான், ஜன 9: மூன்று நாட்களுக்கு முன், மெம்பகா-லெபு பிரதான சாலையில், புரோட்டான் வீரா ஏரோபேக் காரில், இரண்டு மாடுகளைத் திருட முயன்ற நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மாடுகளின் காதுகளில் உள்ள அடையாளங்களின் அடிப்படையில், கிராவ் 4, ரவுபில் உள்ள செம்பனை தோட்டத்தில் இருந்து அவை திருடப்பட்டதாக நம்பப்படுகிறது என ரவுப் மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் ஷஹரில் அப்துல் ரஹ்மான் கூறினார்.
அதிகாலை 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், அத் தோட்டத்தின் அருகில் உள்ள சாலையோரத்தில் குறிப்பிட்ட காரைப் பார்த்ததாகத் தோட்டக்காரர் ஒருவர் கூறினார்,
“மெம்பாகாவில் இரவு சந்தை அமைந்துள்ள இடத்திற்கு அருகே கார் விபத்துக்குள்ளானது,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
23 முதல் 31 வயதுக்குட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் காயங்களுக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் முகமட் ஷஹரில் கூறினார்.
சந்தேக நபர்களில் மூவர் போதைப்பொருளை உட்கொண்டுள்ளனர் என பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் திருட்டு குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டப் பிரிவு 379 இன் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
- பெர்னாமா




