கோலாலம்பூர், ஜன 9 - நாட்டில் குறிப்பாக ஜொகூர் மற்றும் பகாங்கில்
அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்களைக் கருத்தில் கொண்டு
பொதுப்பணித் துறையின் பேரிடர் நடவடிக்கை அறையை (பிக்பென்) வாரம்
முழுவதும் காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை
திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் சாலை பராமரிப்பு பிரிவின் அனைத்து
ஊழியர்களும் சம்பந்தப்பட்டிருப்பர் என்பதோடு நடப்பு நிலவரம் தொடர்பில்
தினசரி நான்கு முறை அறிவிப்பு வெளியிடப்படும் என்று பொதுப்பணி
அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும்
அதேவேளையில் சம்பந்தப்பட்டத் துறைகள் வெளியிடும் உத்தரவுகளையும்
பின்பற்றி நடக்க வேண்டும். அதே சமயம், பொதுப்பணித் துறையும்
எப்போதும் தயார் நிலையில் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில்
பொதுப்பணித் துறை குழு உடனடி உதவிகளை வழங்கும் என அவர்
தெரிவித்தார்.
இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 51 இடங்களில்
இயற்கைப் பேரிடர் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 23 பேரிடர்கள்
கூட்டரசு சாலைகளிலும் 28 பேரிடர்கள் மாநிலச் சாலைகளிலும்
அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.
பொதுப்பணித் துறையின் பேரிடர் நடவடிக்கை அறையின் தரவுகளின் படி
நேற்று மாலை 6.00 மணி வரை 12 நிலச்சரிவு சம்பவங்கள், மூன்று பாலம்
பழுதடைந்த சம்பவங்கள் மற்றும் ஒரு சாலை உள்வாங்கிய சம்பவம்
பதிவு செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.




