சிரம்பான், ஜன 9: சமீபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இணையத்தில் பணக் கடன் தருவதாகக் கூறிய சிண்டிகேட் மூலம் ஏமாற்றப்பட்டு RM194,560 ஐ இழந்தார்.
32 வயதான பாதிக்கப்பட்ட பெண், முகநூலில் பணக்கடன் விளம்பரத்தைக் கண்டு, ரிம 250,000 கடன் வழங்குவதாக கூறிய ஒரு நபரை வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொண்டார் என சிரம்பான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அரிபாய் தாராவே கூறினார்.
"பாதிக்கப்பட்டவர், டெபாசிட் பணம் மற்றும் கடன் ஒப்புதலைப் பெறுவதற்கான பணத்தைச் செலுத்தினார். மேலும் டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 2 க்கு இடையில் சிண்டிகேட் வழங்கிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM194,560 செலுத்தியுள்ளார்.
"இருப்பினும், பாதிக்கப்பட்டவர் கடன் பணத்தைப் பெறவில்லை. பின்னர் சந்தேகமடைந்த அவர் ஜனவரி 5 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எனவே, இணையத்தில் பணம் கடன் வழங்கும் தரப்பினரை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், மோசடிக்கு ஆளாகாமல் இருக்க உடனடியாக காவல்துறையை அணுகுமாறும் அரிபாய் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
- பெர்னாமா




