கோலாலம்பூர், ஜன 9 - ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ளம் காரணமாகத்
திறக்கப்பட்டுள்ள 73 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின்
எண்ணிக்கை நேற்றிரவு 8,566 பேராக குறைந்தது. நேற்று பிற்பகலில் 80
துயர் துடைப்பு மையங்களில் 8,904 பேர் தங்கியிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கோத்தா திங்கியில உள்ள 25 நிவாரண மையங்களில் 4,653 பேர்
தங்கியுள்ள வேளையில் குளுவாங்கிலுள்ள 11 மையங்களில் 1,613 பேரும்
ஜோகூர் பாருவிலுள்ள ஐந்து மையங்களில் 903 பேரும் சிகாமாட்டில்
உள்ள மூன்று மையங்களில் 73 பேரும் கூலாயில் உள்ள ஒரு மையத்தில்
86 பேரும் பொந்தியானில் உள்ள ஒரு மையத்தில் 17 பேரும் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா)
பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட பேரிடர் தொடர்பான சமீபத்திய
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகாங் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,222
பேராக குறைந்துள்ளது. 334 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் மூன்று
மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 27 நிவாரண மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
ரொம்பினில் உள்ள 11 துயர் துடைப்பு மையங்களில் 167 குடும்பங்களைச்
சேர்ந்த 536 பேரும் மாரானில் உள்ள எட்டு மையங்களில் 110
குடும்பங்களைச் சேர்ந்த 473 பேரும் பெக்கானில் 57 குடும்பங்களைச்
சேர்ந்த 57 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.
சரவா மாநிலத்தில் தீவிபத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களைச்
சேர்ந்த 38 பேரை தங்க வைப்பதற்காகக் கூச்சிங்கில் ஒரு துயர் துடைப்பு
மையம் திறக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை காரணமாகக் கெடா, பேராக், ஜொகூர், பகாங், பெர்லிஸ்
ஆகிய மாநிலங்களில் பல ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில்
உள்ளது.
மேலும், வெள்ளம், நிலச்சரிவு, பாலம் உடைந்தது உள்ளிட்ட
காரணங்களால் நாடு முழுவதும் 60 சாலைகள் போக்குவரத்துக்கு
மூடப்பட்டுள்ளன.




