கோலாலம்பூர், ஜன 9- சூலு உரிமைக் கோரல் வழக்கில் தன்மூப்பாக
நடந்து கொண்ட மத்தியஸ்தரான கோன்ஸலோ ஸ்டெம்பாவுக்கு நீதிமன்ற
அவமதிப்பு வழக்கில் ஆறு மாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தராகச் செயல்படுவதிலிருந்து ஸ்டெம்பாவுக்கு ஸ்பெயின் நாட்டு
நீதிமன்றம் ஓராண்டு காலத்திற்குத் தடையும் விதித்துள்ளதாகப் பிரதமர்
துறை அமைச்சர் (சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ
அஸாலினா ஓத்மான் கூறினார்.
சூலு மோசடிகளுக்கு முடிவு கட்டுவதற்கு மடாணி அரசாங்கம்
மேற்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை என்பதற்கு இந்த தீர்ப்பு
எடுத்துக்காட்டாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இறுதித் தீர்ப்பை ரத்து
செய்வதற்கான முயற்சிகள் தொடரப்படும் என்று அவர் தனது எக்ஸ்
பதிவில் தெரிவித்தார்.
சூலு சுல்தானின் வாரிசுகள் எனத் தங்களைப் கூறிக்கொள்ளும் எண்மருக்கு
1,490 கோடி அமெரிக்க டாலர் (6,259 கோடி வெள்ளி) இழப்பீடாக
வழங்கப்பட வேண்டும் என ஸ்டெம்பா கடந்த 2020ம் ஆண்டும் மே மாதம்
25ஆம் தேதி வழங்கிய இறுதித் தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த இழப்பீட்டு உத்தரவை அமல்படுத்தும் விதமாக லக்ஸ்ம்பெர்க்
மற்றும் நெதர்லாந்தில் உள்ள பெட்ரோனாஸ் நிறுவனத்தின்
சொத்துகளையும் பிரான்சில் உள்ள அரச தந்திர சொத்துகளையும் முடக்க
அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியஸ்தர் பதவி ஸ்பெயின்
நாட்டிடமிருந்து பிரான்சுக்கு மாறியதைத் தொடர்ந்து ஸ்பெயின் நீதித்துறை
மீது நம்பிக்கை இழந்திருந்த மலேசியா, மாட்ரிட் உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை தொடர்ந்து ஸ்டெம்பா மீறியதாகக் கூறி அவருக்கு எதிராக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது.
சூலு சுல்தானின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்ட எட்டு பிலிப்பைன்ஸ்
பிரஜைகள் சபா மாநிலத்தின் உரிமைக்காக மலேசியாவிடம் பல கோடி
டாலர் கோரி ஸ்பெயினில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாட்ரிட் நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு சூலு
சுல்தான் வாரிசுகளின் உரிமை கோரல் வழக்கில் ஸ்டெம்பாவை
மத்தியஸ்தராக நியமித்தது.




