கோலாலம்பூர், ஜன 8 - சபா மாநிலத்தில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய
ஷாபு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என
சந்தேகிக்கப்படும் அமலாக்க அமைப்பு ஒன்றின் அதிகாரியைப் போலீசார்
கைது செய்துள்ளனர்.
இந்த புதிய கைது நடவடிக்கையுடன சேர்த்து இந்த போதைப் பொருள்
கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 பேராக
அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 29ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கைது
செய்யப்பட்ட அந்த 43 வயது ஆடவர் அந்த கும்பலில் போதைப்
பொருளைக் கொண்டுச் செல்பவராக செயல்பட்டு வந்துள்ளார் என்று
தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆயோக் கான்
மைடின் பிச்சை கூறினார்.
முன்பு சபாவில் பணியாற்றி வந்த அந்த சந்தேக நபர் தற்போது கிள்ளான்
பள்ளத்தாக்கிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான விசாரணை
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் மேலும் பலர்
கைதாகலாம் என்றும் புக்கிட் அமானில் இன்று நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் சொன்னார்.
அதே சமயம், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையைத்
தயாரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அந்த அறிக்கை
அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகச் சட்டத் துறை தலைவர்
அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றார் அவர்.
இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு,
பயங்கரவாத நிதியளிப்பு தடுப்பு மற்றும் சட்டவிரோத பொருளீட்டல்
சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இக்கும்பல் உறுப்பினர்கள் வசமுள்ள சொத்துகளை அடையாளம் காண உள்நாட்டு வருமான வரி வாரியத்துடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.




