புத்ரா ஜெயா, ஜன 8 - அரசாங்கத்தின் இலக்கவியல் உருமாற்ற
முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் இலக்கவியல் அமைச்சு
உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நாடு பின்தங்குவதைத் தவிர்க்கவும்
ஆக்ககரமான முறையில் போட்டியிடுவதை உறுதி செய்யவும் இயலும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இலக்கவியல் துறை மீது கவனம் செலுத்தாத பட்சத்தில் துரிதமாக
வளர்ந்து வரும் இதர நாடுகளுடன் மலேசியா போட்டியிட முடியாது என்ற
எண்ணத்தின் அடிப்படையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட
அமைச்சரவை மறுசீரமைப்பில் இந்த புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது
என்று அவர் சொன்னார்.
இலக்கவியல் திட்டங்கள் முன்பைவிட வேகமாகவும் தீவிரமாகவும்
மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடில் நாம் மற்றவர்களைக்
காட்டிலும் பின்தங்கி விடுவோம் என இன்று இங்கு நடைபெற்ற பிரதமர்
துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
குறிப்பிட்டார்.
பொருதாரம் மற்றும் இலக்கவியல், தரமான கல்வி, சுகாதாரம்
ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில்
மனுக்குல மதிப்புக்கூறுகள், நீதி மற்றும் உயர்நெறிக்கு தரும்
முக்கியத்துவத்தைப் புறக்கணித்து விட முடியாது என அவர் தெரிவித்தார்.
இலக்கவியல் துறை புதிய தொழில்நுட்பத்திற்கு வழிகாட்டிய போதிலும்
மதிப்புக்கூறுகள் மீது கவனம் செலுத்துவது அவசியமாகும் என அவர்
தெரிவித்தார்.
ஆகவே, இந்த விவகாரம் தொடர்பான எந்த முன்னெடுப்பும் அமைச்சுகள்
மற்றும் துறைகளை முழுமையாக உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும்
அவர் குறிப்பிட்டார்.
நாம் பூமியில் வேரூன்றியுள்ளோம். நம்பிக்கை மற்றும் மதிப்புக்கூறுகளை
உள்ளடக்கிய முறையை நாம் கொண்டிருக்கிறோம். இதனை நாம் அணுக
வேண்டும் என்பதோடு அமைச்சுகள் மற்றும் துறைகளை முழுமையாக
உள்ளடக்கியிருக்க வேண்டும். எதையும் செய்யும் போது பழைய
பாணியில் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.




