கோலாலம்பூர், ஜன 8- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்
அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா
பெர்மசூரி அகோங் துங்கு அஜிசா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதியர்
இன்று இங்கு நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
நாட்டின் 16வது பேரரசரான அல்-சுல்தான் அப்துல்லாவின் பதவி காலம்
இம்மாதம் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதை முன்னிட்டு இங்குள்ள
சுங்கை பீசி, கேம் பெர்டானா முகாமில் இந்த சிறப்பு அணிவகுப்பு நிகழ்வு
நடைபெற்றது.
நாட்டின் 15வது மாமன்னராக பதவி வகித்த ஐந்தாவது சுல்தான்
மாமுட்டிடமிருந்து பேரரசர் பதவியை அல்-சுல்தான் அப்துல்லா கடந்த
2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஏற்றார்.
நாட்டின் 14வது பேரரசரான அல்மார்ஹும் சுல்தான் அப்துல் ஹலிம்
முவாட்ஸாம் ஷா விடைபெற்ற போது இத்தகைய பிரியாவிடை
அணிவகுப்பு நிகழ்வு ஆகக்கடைசியாகக் கடந்த 2016ஆம் ஆண்டு
நடைபெற்றது.
மலேசிய ஆயுதப்படையின் முக்கிய முப்பிரிவுகளான தரைப்படை,
கடற்படை மற்றும் ஆகாயப்டையின் 40 அதிகாரிகள் மற்றும் 888
உறுப்பினர்கள் இந்த மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
இந்த மரியாதை அணிவகுப்பு நிகழ்வின் சிறப்பு அங்கமாக
ஆயுதபடைகளின் ஐந்து ஹெலிகாப்டர்கள் தேசிய கொடி மற்றும்
தரைப்படை, ஆகாயப்படை மற்றும் கடற்படை கொடிகளை ஏந்தி
தாழ்வாகப் பறந்தன.
அல்-சுல்லான் சிறப்பு வாகனத்திலிருந்து மரியாதை அணிவகுப்பைப்
பார்வையிட்டார்.




