ஜொகூர் பாரு, ஜன 8 - ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவரகள் எண்ணிக்கை இன்று காலை 6,564 பேராக
அதிகரித்துள்ளது. 1,819 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும்
ஆறு மாவட்டங்களில் உள்ள 51 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை 3,322 பேராக இருந்தாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக்
செயல்குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
கோத்தா திங்கி, குளுவாங் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய மாவட்டங்களில்
அதிகரித்து வரும் வெள்ள பாதிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோத்தா திங்கியில் மிக அதிகமாக அதாவது 783 குடும்பங்களைச் சேர்ந்த
2,964 பேர் 24 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாகக் கூறிய அவர்,
ஜோகூர் பாருவில் உள்ள 10 நிவாரண மையங்களில் 504 குடும்பங்களைச்
சேர்ந்த 1,844 பேரும் குளுவாங்கிலுள்ள 14 மையங்களில் 500
குடும்பங்களைச் சேர்ந்த 1,633 பேரும் அடைக்கலம் நாடியுள்ளதாகச்
சொன்னார்.
கூலாயில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேரும் சிகாமாட்டில் ஐந்து
குடும்பங்களை ச் சேர்ந்த 23 பேரு பொந்தியானில் நான்கு குடும்பங்களைச்
சேர்ந்த 17 பேரும் தலா ஒரு துயர் துடைப்பு மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
ஜொகூர் மாநிலத்தில் ஆறு ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில்
உள்ளதை மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் தரவுகள்
காட்டுவதாக மாநில அரசுச் செயலாளருமான நஸ்மி குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்று நள்ளிரவு நிலவரப்படி பகாங் மாநிலத்தில்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 221 குடும்பங்களைச்
சேர்ந்த 845 பேராகக் குறைந்துள்ளதாக நட்மா எனப்படும் தேசியர் பேரிடர்
மேலாண்மை நிறுவனத்தின் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட
ஆக சமீபத்திய நிலவரம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொம்பின், மாரான் மற்றும் பெக்கான் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த
அவர்கள் அனைவரும் 23 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.




