அலோர்ஸ்டார், ஜன 8 - ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (எம்.ஏ.சி.சி.)
கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட கெடா
கால்பந்து சங்கத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி ஜூல்கிப்ளி சே
ஹருண் எம்.ஏ.சி.சி. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கால்பந்து
சங்கம் கூறியது.
இதர மூவருடன் எம்.ஏ.சி.சி.யிடம் வாக்குமூலம் வழங்கியப் பின்னர்
ஜூல்கிப்ளி எம்.ஏ.சி.சி.யின் பிணையில் விடுவிக்கப்பட்டதாக கெடா
கால்பந்து சங்கத்தின் ஊடக மற்றும் பொது உறவு குழுவின் தலைவர்
இப்ராஹிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து எங்களுக்கு கடந்த வியாழக்கிழமை
தெரியவந்தது. எம்.ஏ.சி.சி.யின் விசாரணைக்காக அழைக்கப்பட்ட
ஜூல்கிப்ளி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதாக
வெள்ளிக்கிழமை காலை எங்களிடம் தெரிவிக்கப்பட்டது என அவர்
சொன்னார்.
இந்த விசாரணை இன்னும் தொடக்கக் கட்டத்தில் உள்ளதால்
இவ்விவகாரம் குறித்து ஆருடங்களை வெளியிடுவதையோ யாரையும்
ஆதாரமின்றி குற்றஞ்சாட்டுவதையோ நிறுத்திக் கொள்ளும்படி பொது
மக்களை குறிப்பாக கால்பந்து ரசிகர்களை சங்கம் கேட்டுக் கொள்வதாக
அவர் குறிப்பிட்டார்.
கெடா கால்பந்து சங்கத்தின் தலைமைச் செயலமுறை அதிகாரி உள்பட
நால்வரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான அனுமதியை
எம்.ஏ.சி.சி. பெற்றுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தன.
கடந்த 2020ஆம் ஆண்டில் 60 லட்சம் வெள்ளியை கையூட்டாகப் பெற்றது
தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த நால்வரும் கைது
செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.




