ஈப்போ, ஜன 8: நேற்று நூர் அஸ்-சலாம் இஸ்லாமிய கல்வியகத்தில் (ரந்தாவ் பஞ்சாங்) பெண் குழந்தையை பெட்டியில் வீசி எறிந்த சந்தேகத்தின் பேரில் 17 வயது ஆண் மற்றும் 14 வயது பெண் என இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
காலை 7.28 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், இஸ்லாமிய கல்வியகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பெண் குழந்தையைக் கண்டெடுத்ததாக ஒருவரிடமிருந்து அவரது தரப்புக்குப் புகார் வந்ததாகச் செலாமா மாவட்ட காவல் துறைத் தலைவர் சருடின் சாமா தெரிவித்தார்.
புதிதாகப் பிறந்ததாக நம்பப்படும் அக்குழந்தை, தொப்புள் கொடியுடன் காணப்பட்டது, பின்னர் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினரிடம் புகார் செய்வதற்கு முன், புகார்தாரர் அக்குழந்தையை மேல் சிகிச்சைக்காக செலமா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை வீசியதில் ஈடுபட்டதாக நம்பப்படும் 17 வயது ஆணை நேற்று காவல்துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர். 14 வயது பெண் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"இருவரும் பள்ளி மாணவர்கள் ஆவர். இரண்டு சந்தேக நபர்களின் கைதுடன் வழக்கு முடிக்கப்பட்டுள்ளது," என்று சருடின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
- பெர்னாமா




