ஷா ஆலம், ஜன 8 - மூன்று உள்நாட்டு ஊடகவியலாளர்கள் மந்திரி
புசாரின் அதிகாரத்துவ இல்லத்தில் அத்துமீறி நுழைந்த விவாகரம்
தொடர்பான விசாரணை அறிக்கை மாநில சட்டத்துறைத் துணைத்
தலைவரிடம் இன்று சமர்ப்பிக்கப்படும்.
பிடிபட்டவர்களைக் தடுத்து வைப்பதற்கு குறுகிய கால அவகாசமே
வழங்கப்பட்ட போதிலும் தமது தரப்பு இந்த விசாரணையை வெற்றிகரமாக
செய்து முடித்துள்ளதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
கைதானவர்களுக்கு போலீஸ் ஜாமீன் வழங்ப்பட்ட வேளையில் தடுப்புக்
காவலின் போதே விசாரணை முழுமை பெற்று விட்டது. விசாரணை
அறிக்கையை நாங்கள் துணை பப்ளிக் புரோசிகியூட்டரிடம் இன்று
ஒப்படைக்கவுள்ளோம் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 447வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்வதற்காக 31 முதல் 35 வயது வரையிலான அந்த மூவரையும்
இரு தினங்களுக்குத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் வழங்கியுள்ளதாகப் பெர்னாமா நேற்று முன்தினம் செய்தி
வெளியிட்டிருந்தது.
ஷா ஆலம், செக்சன் 7இல் உள்ள மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ
இல்லத்தில் மூவர் அத்துமீறி நுழைவதைச் சித்தரிக்கும் 29 விநாடி
காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.




