புத்ராஜெயா, ஜன 4 - சிறு தோட்டக்கார்களுக்குச் சொந்தமான சுமார் 4,20,000 ஹெக்டர் ரப்பர் தோட்டங்கள் எதிர்நோக்கும் ஆள்பபலத் தேவையை பூர்த்தி செய்ய அத்துறையில் சுமார் 80,000 தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.
சுமார் 420,000 ஹெக்டர் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. தொழிலாளர்கள் இல்லாததால் அத்தோட்டங்களில் பால் வெட்டுத் தொழிலை மேற்கொள்ள இயலவில்லை. எனவே இது ஒரு பிரச்சனையாக உள்ளது என்று அவர் சொன்னார்.
மதிப்பீட்டின் அடிப்படையில், ஒன்றரை ஹெக்டருக்கு ஒரு தொழிலாளி தேவைப்படுகிறார். எனவே எங்களுக்கு 70,000 முதல் 80,000 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என இன்று தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சின் மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஆள்பலப் பற்றாக்குறை காரணமாக சிறு தோட்டக்காரர்களுக்குச் சொந்தமான 420,000 ஹெக்டர் ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டுத் தொழில் மேற்கொள்ளப்படாததால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 230 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக ஜோஹாரி கடந்த மாதம் 29ஆம் தேதி கூறியிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், ரப்பர் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, அதிக உற்பத்தி செலவுகள் மற்றும் பொருளாதார ரீதியில் பலன் தராத தோட்டங்களின் அளவு உள்ளிட்டவை இதற்கு காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரசாங்கம் எந்த தடுப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தப்படாவிட்டால் இந்த நிலைமை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கு முதலாளிகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதோடு அவர்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.




