புத்ராஜெயா, ஜன 4 - முந்தைய இரு அரசு நிர்வாகங்கள் விளம்பரம் மற்றும் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 70 கோடி வெள்ளியைச் செலவு செய்தது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்.ஏ.சி.சி.) நடத்தி வரும் விசாரணைக்கு உதவ தகவல் தொடர்பு அமைச்சு தயாராக உள்ளதாக அதன் அமைச்சர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
விசாரணை அமைப்புகளைப் பொறுத்தவரை, தேவை ஏற்பட்டால் இந்த அமைச்சு உட்பட எங்கும் விசாரணை நடத்துவது அவர்களுக்கு உள்ள உரிமையாகும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
எனினும், இந்த விசாரணையில் உதவுமாறு எம்.ஏ.சி.சி.யிடமிருந்து அமைச்சுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை என அவர் சொன்னார்.
விளம்பர மற்றும் பிரபலப்படுத்தும் நோக்கங்களுக்காக கடந்த 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் 70 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டதில் அரசாங்கத்தின் செலவு செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எம்.ஏ.சி.சி.யின் புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் முன்னதாகக் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தின் போது பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய பதிலின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
கடந்த 2020 முதல் இதுவரை அச்சு, இலக்கவியல் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடக தளங்களிலும் அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் விளம்பர மற்றும் பிரபலப்படுத்தும் பணிகளுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகையை வெளியிடுமாறு பிரதமரிடம் பிரபாகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.




