கோலாலம்பூர், ஜன 4 - புத்தாண்டை முன்னிட்டு கடந்த மாதம் 31 மற்றும்
ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட
137 சாலைத் தடுப்புச் சோதனைகளில் பல்வேறு குற்றங்களுக்காக 84 பேர்
கைது செய்யப்பட்டதோடு 6,297 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டன.
கைதானவர்களில் 52 பேர் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் கீழும் 24 பேர் 1959ஆம் ஆண்டு குடிநுழைவுத் சட்டத்தின் கீழும்
எண்மர் அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழும் கைது
செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும்
அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் அகமது
சப்ரி கூறினார்.
இந்நடவடிக்கையின் போது வாகனப் பதிவு எண்கள் நிர்ணயிக்கப்பட்ட
விதிகளுக்கேற்ப இல்லாதது தொடர்பில் மிக அதிகமாக அதாவது 1,788
குற்றப்பதிவுகள் வெளியிப்பட்டதாக கூறிய அவர், வாகனமோட்டும்
லைசென்ஸ் இல்லாத குற்றத்திற்காக மேலும் 1,422 பேருக்கு அபராதம்
விதிக்கப்பட்டது என்றார்.
அதிகாலை 5.00 மணி வரை நீடித்த இந்த சோதனையில் 1984ஆம் ஆண்டு
சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 60வது பிரிவின் கீழ் 366 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர் சொன்னார்.
இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு அமலாக்கத் துறைகளைச்
சேர்ந்த 4,378 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக அவர்
மேலும் தெரிவித்தார்.




