புத்ராஜெயா, ஜன 3 - மொத்தம் 1029.2 கிராம் கஞ்சாவை கடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொருளை வைத்திருந்ததாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினா.ர்
போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக எம்.பாஸ்கரன் என்ற அந்நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் டத்தோ ஹாட்ஹாரியா சைட் இஸ்மாயில், டத்தோ ஹாஷிம் ஹம்சா மற்றும் டத்தோ அஸ்மி அரிஃபின் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு, அவருக்கு 10 ஆண்டுகால தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது.
போதைப்பொருள் வைத்திருந்ததாக கொண்டு வரப்பட்ட மாற்றுக் குற்றச்சாட்டை 52 வயதான பாஸ்கரன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாஸ்கரன் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்ததால் அவர் பிரம்படியிலிருந்து விடுபட்டதாக நீதிபதி ஹாட்ஹாரியா தனது தீர்ப்பில் கூறினார்.
மேலும், அவர் கைது செய்யப்பட்ட நாளான ஆகஸ்ட் 15, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் பவுஸியா டாவுட், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை குறைக்க அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 4, 2021 அன்று, ஆகஸ்ட் 15, 2018 அன்று இரவு 7 மணிக்கு சிலாங்கூர், போர்ட் கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் தொழில்துறை பகுதியில் உள்ள தைபான்கோவில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் போதைப்பொருளை கடத்தியதாகக் கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டில் பாஸ்கரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.




