ஷா ஆலம், ஜன 3: நேற்று தாமான் மாஜு, அம்பாங் ஜெயாவில் கதவை வேகமாக மூடியதற்காகப் பெண் ஒருவரை அவரது கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அப்பெண் (40), அவரது கணவருடன் (45), ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கைகள், கால்கள் மற்றும் உடலில் காயமடையும் அளவுக்குத் தாக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் சந்தேக நபர் நேற்று மதியம் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார் என உதவி ஆணையர் முகமட் ஆசம் இஸ்மாயில் கூறினார்.
"அம்பாங் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் வலது கை, வலது நடுத்தர விரல் மற்றும் வலது காலில் மென்மையான திசு காயங்கள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
போதைப்பொருள் சோதனை எதிர்மறையான முடிவைக் காட்டியதோடு சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 323 மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் பிரிவு 18A இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என அவர் கூறினார்.




