NATIONAL

இந்திய வர்த்தகர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தெக்குன் அதிகரிக்க வேண்டும்-டத்தோ ரமணன் வலியுறுத்து

3 ஜனவரி 2024, 8:11 AM
இந்திய வர்த்தகர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தெக்குன் அதிகரிக்க வேண்டும்-டத்தோ ரமணன் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜன 3 - தெக்குன் எனப்படும் தேசிய தொழில்முனைவோர்

கடனுதவித் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள

மூன்று கோடி வெள்ளி நடப்புச் சவால்களைக் கருத்தில் கொண்டு மேலும்

அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும்

கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் அரசாங்கத்தை

வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்

கவனத்திற்குக் கொண்டுச் செல்வதாக அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்

வாக்குறுதியளித்துள்ளதாக அவர் சொன்னார்.

அதே சமயம், தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழுள்ள

எஸ்.எம்.இ. கார்ப்ரேஷன், மலேசிய கூட்டுறவுக் கழக ஆணையம் மற்றும்

இதர துறைகளின் வாயிலாக இந்திய சமூகம் பயன் பெறுவதற்குரிய

வாய்ப்புகளைக் கண்டறியுமாறு அமைச்சர் தம்மைக் கேட்டுக்

கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பல தொழில்முனைவோருக்கு உதவிகளும் ஆதரவும் தேவைப்படுவதை

நான் உணர்ந்துள்ளேன். அவர்களுக்கு இயன்ற உதவிகளை நாம்

வழங்குவோம் என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சர் டத்தோ எவோனுடன் சந்திப்பு நடத்திய டத்தோ

ரமணன், அமைச்சின் இவ்வாண்டிற்கான திட்டங்கள் மற்றும் இலக்குகள்

குறித்து விவாதித்தார்.

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத் துறைகளில் மேம்பாடுகளைக்

கொண்டு வருவதில் அமைச்சின் பணிகள் மற்றும் செயலாக்கத்தை

அதிகப்படுத்துவதில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டை வெளிப்படுத்தும்

விதமாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது என்று அவர் சொன்னார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான

உந்து சக்தியாக இந்த ஒத்துழைப்பு உணர்வு விளங்கும் என்பதற்கான

சான்றாகவும் இது விளங்குகிறது என்றார் அவர்.

சமூகத்திற்கும் நாட்டிற்கும் வளர்ச்சியைக் கொண்டு வரும் அமைச்சின்

முயற்சிகளுக்குத் தாம் பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க முடியும்

எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.