புத்ராஜெயா, ஜன 2 - வெள்ளத்தால் 4,893.73 ஹெக்டர் விவசாய நிலங்களும் 2,269 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் விளைவாக 2 கோடியே 28 லட்சத்து 23 ஆயிரத்து 601 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிளந்தானில் உள்ள விவசாய நிலங்களும் அடங்கும் என்று அவர் இன்று சமீபத்திய வெள்ள நிலைமை தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கிளந்தானில் 23 சுகாதார வசதிகள், பகாங்கில் 17 வசதிகள் திரங்கானுவில் 11 வசதிகள் உள்ளபட மொத்தம் 51 சுகாதார வசதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாநிலங்களில் 62,467 பேரும் 19,204 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்ட அலுவலகங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நியாயமான முறையில் உதவிகளை விநியோகிக்கும் என்று தாம் நம்புவதாக ஜாஹிட் கூறினார்.
இதேபோல், வரும் பிப்ரவரி முதல் மார்ச் வரை சபா மற்றும் சரவாக்கில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தயார் நிலையில் உள்ளது.
பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு கரை மாநிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை விரைந்து வெளியேற்ற ஹைட்ராலிக் பம்புகளை கொள்முதல் செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஜாஹிட் வலியுறுத்தினார்.
இந்த ஹைட்ராலிக் பம்ப்களை கொள்முதல் செய்வதற்குக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், கொள்முதல் நடைமுறைகள் காரணமாக அச்சாதனங்கள் இன்னும் தருவிக்கப்படவில்லை என்று எனக்கு புகார் கிடைத்துள்ளது என்றார் அவர்.




