கோலாலம்பூர், ஜன 2: ஆட்டிஸ்மா சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மாட்டின் கொலை தொடர்பான விசாரணையில் இதுவரை புதிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் விசாரணை நிறுத்தப்படாது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமார் கான் உறுதியளித்தார்.
"இந்த வழக்கை தீர்ப்பதில் தடயங்களை கண்டறிய விசாரணை இன்னும் தொடர்கிறது," என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஆறு வயது சிறுவன் இங்குள்ள டாமன்சாரா டாமாயில் காணாமல் போன நிலையில் மறுநாள் அபார்ட்மென்ட் இடமானில் உள்ள அவரது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு சிற்றோடை அருகே இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அச்சிறுவன் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
காவல்துறை சர்வதேசக் காவல்துறையின் (இன்டர்போல்) உதவியையும் கோரியது மற்றும் அச்சிறுவனின் கொலையை விசாரிக்க உதவும் தரவுத்தள மதிப்பாய்வு தொடர்பான பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறது.
- பெர்னாமா




