NATIONAL

மலேசியப் போதைப் பொருள் கடத்தல் மன்னன் லாவோஸில் கைது

2 ஜனவரி 2024, 6:32 AM
மலேசியப் போதைப் பொருள் கடத்தல் மன்னன் லாவோஸில் கைது

பேங்காக், ஜன 2 - போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக தாய்லாந்து அரசாங்கத்தால்  தேடப்பட்டு வந்த மலேசிய  ஆடவர்  கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாய்லாந்து-லாவோஸ் கூட்டு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கும்பலின்  முக்கிய உறுப்பினர் என்று கூறப்படும் 39 வயதான அந்த மலேசியர்  லாவோஸில் தலைமறைவாக இருந்து வந்ததாக  தாய்லாந்து காவல்துறை தெரிவித்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தங்க முக்கோணப் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்த போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் மலேசிய நபரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின்அலுவலகம் விசாரித்து வருவதாக உதவி தேசிய காவல்துறை தலைவர் போல் லெப்டினன்ட் ஜெனரல் பானுரத் லக்பூன் சொன்னார்.

அந்த நபர் கடந்த  டிசம்பர் 29ஆம் தேதி  லாவோஸில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த சந்தேக நபர் தாய்லாந்து, மலேசியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் போதைப்பொருள் வலையமைப்புடன்  இணைந்து பணியாற்றி வந்துள்ளார். சட்டவிரோதப்  பண பரிவர்த்தனை செய்வதற்கும் மலேசியா, தைவான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கும்  வழித்தடமாக தாய்லாந்தை அவர் பயன்படுத்தியுள்ளார் என அவர் சொன்னார்.

தாய்லாந்து  மலேசியா மற்றும் லாவோஸ் அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான தொடர்ச்சியான விசாரணை மற்றும் அணுக்கமான ஒருங்கிணைப்பின் விளைவாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம்  ராட்சாபுரி பாநிலத்தில் 998 கிலோ கிறிஸ்டல் மெத்தம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டு ஏழு சந்தேக நபர்கள் கைது செய்ததைச் சுட்டிக் காட்டிய அவர், இக்கடத்தலின் பின்னணியில்  முக்கிய சந்தேக நபராக இல்வாடவர் இருந்துள்ளதைப்  புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று  கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.